|
|
|
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் 25 ஆண்டுகால
நிறைவை (1991 - 2016) சிறப்பிக்குமுகமாக கூற்று வெளிவந்திருக்கிறது. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் கடந்த 25 வருட செயல்வாதத்தின் முக்கிய பரிமாணங்களையும், தருணங்களையும் கையகப்படுத்தி அவ் வரலாற்றை ஆவண வடிவில் வெளியிட்டிருக்கிறார்கள் கூற்றின் பதிப்பாசிரியர்களான சித்திரலேகா மௌனகுருவும், மர்லின் வீவரும். இதைவிட அனுராதா இராஜரட்ணம், சரளா இமானுவல், இ.வினிபிரட் ஜெயசாந்தினி, விஜயலட்சுமி சேகர் ஆகிய நால்வரும் கூற்றின் ஆசிரியர் குழுவாக தம் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
'எங்கள்
மூச்சுக் காற்றுடன் இணையும் - எம்
சகோதரிகளின் சுவாசம்
கலந்துள்ள காற்றுக்கே அர்ப்பணம்' என்ற
விஜயலட்சுமியின் கவிதையோடு தொடங்கும்
இவ்வெள்ளி மலரில் காணப்படும் விடயதானங்களின் உட்சரடாக மூன்று அம்சங்களை 'ஆசிரியை கூறுவது' பகுதியில் காணலாம். அவை 1) ஒரு பெண்நிலை அமைப்பாக சூரியாவின் உருவாக்கச் சூழமைவும், அதன் பயணமும் 2) சூரியாவின் செயற்பாடுகள் 3) அலுவலர்களின் படிப்பினைகள், எதிர்கொண்ட சவால்கள் பற்றிய கருத்துகளும், மதிப்பீடுகளும் என சித்திரலேகா குறிக்கிறார்.
மலரினுள்ளே, 'சூரியா' என்ற பெயர் எப்படி வந்தது என்ற காரணத்தை முன்னாள் அலுவலர் ரெஜி டேவிட் மூலமாக அறிந்து கொள்கிறோம். அவர் "ஒளிதரும் சூரியனின் பெண்பாலாக சூரியாவைக் கருதியதுடன் ஒளியைத்தேடும் மக்களுக்கு இது ஆழ்ந்த அர்த்தத்தைத் தரும் எனவும் நம்பினோம்" என்கிறார்.
கூட்டு முயற்சியே சூரியாவின் இயங்குதளம் என்பதை இம் மலரில் காணப்படும் அத்தனை அனுபவப் பகிர்வுகளும், கட்டுரைகளும் நமக்குச் சொல்கின்றன. பெண்கள் கூட்டாக தமக்கான வெளிகளில் இயல்பாக இயங்குவதற்கும், தமக்கான வெளிகளைக் கண்டு கொள்வதற்கும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனமானது நுண் வெளிகளை உருவாக்கித்தருவதுடன் எதிர்கால தரிசனத்தோடு சகோதரித்துவத்தின் நீண்டதொரு உரையாடலுக்கும் அது வழிவகுக்கிறது என்பதையே சூரியாவின் இந்த 25 ஆண்டுகால செயற்பாடுகள் நமக்கு உணர்த்துகிறது
கூற்று முழுவதும் காணப்படும் கூட்டு முயற்சிகளும் செயற்பாடுகளும் மலைக்க வைக்கின்றன. ஓவியக் கண்காட்சிகள், வில்லுப்பாட்டுகள், நடமாடும் நூலகங்களை அமைத்தல், நாடகப் பயிற்சிப்பட்டறைகள், குழுவாக நாடகங்களை உருவாக்குதல் (நிராகரிக்க முடியாதபடி), கவிதாநிகழ்வுகள் (வாருங்கள் தோழியரே வையகத்தை வெற்றி கொள்ள ), கண்ணுக்குப்புலனாகாத அரங்க நிகழ்த்துகைகள் (கனகம்மாவின் கதை), பாரமுறி விளையாட்டு, மட்டுநகர் கண்ணகைகள், நிசப்த இரைச்சல், இது எமது படைப்பு, ஒரு பிடி அன்பு, காவலம்மா போன்ற நாடக உருவாக்கங்களையும் சொல்லலாம்
இதைவிட கலாச்சாரக்குழுவினர் எழுதிய கவிதைகள் 'கனல்', 'வெளிப்படுதல்' என இரு தொகுதிகளாகவும், பாடல்கள் 'பெண்களின் குரல்' என்ற ஒலிநாடாவாகவும் வெளிவந்துள்ளன. ஜெயந்தி தளையசிங்கத்தின் 'எமது கலாச்சரக்குழுவின் பயணம்' மங்கையின் 'அரங்கம்-கொதிநிலம் தணிக்கும் ஊற்று', சித்திரலேகாவின் 'ஒருபோதும் தனித்தல்ல' கட்டுரைகள் இக் கூட்டு முயற்சிகளைப் பெரிதும் பிரதிபலிக்கின்றன.
பெண் சஞ்சிகை பற்றிய குறிப்பு, முன்னாள் மற்றும் தற்போதைய சூரியா அலுவலர்களின் வாக்குமூலங்கள், அ.இலங்கேஸ்வரி, சு.கல்யாணியின் உரையாடல், வாசுகி, அனுராதாவின் உரையாடல், ஜெயசாந்தினியின் 'சூரியாவின் நூலகமும், ஆவணமாக்கலும்' பகுதி, சரளாவின் 'பெண்கள் மற்றும் சிறுமியருக்கெதிரான பாலியல் வன்முறைகளை எதிர்கொளல்' கட்டுரை, யமுனாவும், குழந்தைஉம்மாவும் பற்றிய சித்திரலேகாவின் அனுபவப் பகிர்வு எல்லாம் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் பல்வேறுபட்ட சமூக ஆக்கச்செயற்பாடுகளை நம் கண்முன்னால் கொண்டுவருவதுடன் அவர்கள் எதிர்கொண்டதும், கொள்ளவேண்டியிருக்குமான சவால்களையும் எமக்கு உணர்த்துகின்றன.
ஒரு பொருள் பல துண்டு ஓவியங்களில் பரந்து வரையப்பட்ட 'பாய்' அட்டை ஓவியத்தை அருந்ததி ரட்ணராஜ் கூற்றுக்காக வரைந்திருக்கிறார். பாய் இழைத்தல் மட்டக்களப்புப் பெண்களிடையே காணப்படும் கைவினைத்திறனாகும். இந்த ஓவியத்தில் மட்டக்களப்பினதும், பெண்களின் கதைகளினதும் வாசனையைக் கொண்டு வர முயன்றுள்ளேன் என்கிறார் அவர்.
மறைந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும், 'பெண்நிலை அரசியலையும், எமது கதைகளையும், கனவுகளையும் பகிர்ந்து கொண்ட' சுனிலா அபேசேகரவிற்கு 25 வருட பெண்களின் குரல்களால் நன்றி தெரிவித்திருப்பது சாலப் பொருத்தமானதே.
பின்னட்டையில் உள்ள லோகநாயகியின் கவிதை ' அப்போதுதான்' இந்த இடத்தில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தையும், அதன் பயணத்தையும் அழகாக உருவகிக்கிறது.
'தன்னைத்தானே கிள்ளிப் பார்க்கிறாள்
நானா நானா இவள்
அப்போதுதான்
கடந்து வந்த பாதையை
நினைத்துப் பார்க்கிறாள்
காலடித் தடத்தினை'
வெள்ளிவிழாக் காணும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்துக்கும், தோழமைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி: எதிரொலி