|
|
|
அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுத் தொடர்ச்சியைக்
கொண்டிருப்பவர்கள். இவர்கள் பண்டைய அவுஸ்திரேலியாவின் நிலப்பிராந்தியங்களில் நூற்றுக்கணக்கான
வகைப்பட்ட இனக்குழுக்களாக, பன்மொழிகளுடனும், பண்பாடு, கலாச்சாரங்களுடனும் வாழ்ந்திருக்கிறார்கள்.
இப்பூர்வீக குடிகளை அபோரிஜினல் மக்கள் என்பர்.
ஒவ்வொரு இனக்குழுவுக்கும் அவர்கள் பூர்வீகமாக
வாழ்ந்துவந்த பிராந்திய நிலப்பகுதி (நீர்நிலைகள், மலைகள் உட்பட) சொந்தமாக இருந்தது.
அப்பகுதியின் 'பூர்வீக உரிமையாளர்'களாக ஒவ்வொரு இனக்குழுவினரும் இருந்துடன் தத்தமது
நிலப்பகுதியின் எல்லைகளை அவர்கள் தெளிவாக அறிந்திருந்தனர். இந்த அறிவு காலங்காலமாக
அந்தந்த இனக்குழுவின் தலைமுறைகளுக்குக் கையளிக்கப்பட்டு வந்துள்ளது. பிரயாணங்களின்
போது, ஒரு இனக்குழு, இன்னொரு இனக்குழுவின் எல்லையைக் கடக்க வேண்டியிருந்தால் அதற்கான
'அனுமதி' பெற்றபின் மற்றையவரின் நிலத்தைக் கடப்பது வழமையாக இருந்திருக்கிறது. நிலஉடைமை
என்பது தனியுடைமையாக இல்லாது ஒவ்வொரு இனக்குழுவிற்குமான பொதுச்சொத்தாக இருந்திருக்கிறது.
1920களின் பின்னர்தான் கவிதை முயற்சிகள் வாய்மொழிப்பாடல் வடிவில் சிறுதுண்டுப் அபோரிஜினல்
மக்கள் தாம் வாழும் நிலவமைப்பையும், அதன் சீதோஷ்ண நிலை மாற்றங்களையும், சுற்றுச்சூழலையும்
தெள்ளத்தெளிய அறிந்து வைத்திருப்பவர்கள். அவ்வப் பிரதேசங்களில் காணப்படும் ஒவ்வொரு
இயற்கைக் காட்சிக்கும், இயற்கை நிகழ்வுக்கும், இயற்கைச் சூழலுக்கும் உயிர் இருப்பதாகவே
நம்புபவர்கள். வானவில்லும், இடிமுழக்கமும், வசந்தகாலமும், ஏரி, குளங்களும், மலைகளும்
உயிரோடு சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது அபோரிஜினல் மக்களின் ஐதீகம்.
தாவர, விலங்கு, பூச்சிகளாகிய பல்லுயிர்களில் பெரும் அக்கறை கொண்ட இந்த மக்கள், தமது
உயிர் வாழும் தேவைக்காக, தாம் வாழும் சுற்றுச்சூழலில் இருந்து 'அவசியமானதை மட்டும்'
எடுத்துக் கொள்பவர்கள்.
ஆங்கிலேயரும், அபோரிஜினல் மக்களும் இரு வேறு உலகத்தவர்கள்.
இரண்டு மக்கட்கூட்டமும் அவற்றின் வேர்களிலேயே நேரெதிரான கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைக்
கொண்டிருப்பவை. அபோரிஜினல் ஆட்கள் முதன்முதலில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது
'எங்கிருந்து வருகிறாய்? உன் இனக்குழு எது?' என்கிறார்கள். ஆங்கிலேயரோ 'நீ எப்படி இருக்கிறாய்?'
என்ன வேலை செய்கிறாய்?' என்கிறார்கள். இந்த விளிப்புகளில் நிலப்பகுதி, பிரயாணத்தூரம்,
இனக்குழு என்பனவற்றிற்குப் பின்னால் இருக்கும் கூட்டுமனப்பாங்கையும், தனிநபர் மற்றும்
சுயம் சார்ந்த தொனியையும் நாம் பிரித்து விளங்கிக்கொள்ளலாம்.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலக்குடியேற்றவாதிகள், "எவருக்கும் சொந்தமற்ற மண் " என்று பிரகடனப்படுத்தி,
இந்த மண்ணைக் கைப்பற்றிக் கொண்டபோது இம் மண்ணின் பூர்வீக மக்களாகிய அபோரிஜினல்களிடம்
ஈட்டிகளும், தடிகளும் இருந்தனவே ஒழிய, அவர்களிடம் அம்பு, வில் போன்ற ஆயுதங்கள் கூட
இருக்கவில்லை. உயிர்வாழ்தலும், அவ்வப்போதான தூர நடைப்பிரயாணங்களும், பண்டமாற்றும்,
கனவும், பாடல்களும், நடனமும், இசையும், சடங்குகளும், ஓய்வுமாக வாழ்ந்த பூர்வீக மக்களுக்குத்
துவக்குகளும், வெடிகளும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். தமது பூர்வீக நிலங்களை ஆங்கிலேயர்
வளர்ச்சியென்றும் அபிவிருத்தியென்றும் துண்டுகளாக்கி, மரங்களைத் தறித்து அந்த நிலக்காட்சியையே
முற்றிலுமாக மாற்றியமைத்ததும் கூட பெரும் மன உளைச்சலைக் கொடுத்திருக்கும்.
இம்மண் கைப்பற்றப்பட்டுப் புதிய ஆங்கிலேயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போது, இச்சூழலைச் சாராத, இந்நிலத்துக்கு
ஒவ்வாத எத்தனையோ பறவை, மிருகங்களும், தாவரங்களும், ஊர்வனவும் ஆங்கிலேயரால் அறிமுகப்பட்டன.
அவை இப்பூர்வீகநிலத்தின் சுற்றுச்சூழற் சமநிலையை பெரிதும் குலைத்தன. ஆங்கிலேயக் குடியேற்றவாதிகளோடு
வந்திறங்கிய இந்நிலத்துக்குப் புதிதான நோய்களும், வியாதிகளும் இப் பூர்வீக மக்களைக்
கொன்றொழித்தன. அபோரிஜினல் பெண்களும், ஆண்களும் அடிமைகள் போல் நடத்தப்பட்டனர். அபோரிஜினல்
குழந்தைகளும், சிறாரும் இனக்குழுக்களில் - குடும்பங்களில் இருந்து முற்றாகப் பிரிக்கப்பட்டு
அரச கண்காணிப்பின் கீழ் பராமரிப்பு இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு ஆங்கிலேய வாழ்க்கை
முறைகளுக்குப் பயிற்றுவிக்கப்பட்டார்கள். இதனால் இத்தலைமுறையைச் சேர்ந்த அபோரிஜினல்
மக்கள் தத்தமது பூர்வீக இனக்குழுக்களின் உறவுத்தொடர்பு மற்றும் மொழி கலாச்சார பண்பாட்டுத்தொடர்ச்சியை
முழுவதுமாக இழந்தனர்.
இதைவிட இரு சாராரிடையேயும் விருப்பத்தோடும், விருப்பமின்றியும்,
ஆண்டை - அடிமை உறவுகளாலும் பல 'கலப்பு'கள் நிகழ்ந்தன. இதன் விளைவாகப் பிறந்தவர்கள்
இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவ்வாறு கலப்பில் பிறந்தவர்களை அபோரிஜினல்
இனக்குழுக்களும், ஆங்கிலேயரும் சந்தேகக்கண்ணோடும், வெறுப்போடும் பார்த்தனர். இவர்கள்
விலக்கப்பட்டவர்களாக, இழிவானவர்களாக நடத்தப்பட்டனர்.
இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிதைகள், அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிக் கவிஞர்களால் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை.
ஏனெனில் இக்கவிஞர்களின் இனக்குழு மொழிகள் வாய்மொழி மரபைச் சார்ந்தவை. இக்கவிதைகள் எழுதப்பட்டிருக்கும்
வரிவடிவம் ஆங்கிலமாக இருந்தாலும், அவற்றின் ஆன்மா கண்ணைப் பறிக்கும் பிரகாசத்துடன்
கறுப்பாக இருக்கின்றது.
இம் மொழிபெயர்ப்பை நேர்த்தியுடன் வெளியிடும் அணங்கு பெண்ணியப்
பதிப்பகத்துக்கும், அட்டையை வடிவமைத்த நரேந்திரனுக்கும், உந்துதலாய் இருக்கும் மாலதி
மைத்ரி, றஞ்சி மற்றும் தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நான் வாழும் இந்தக் கான்பெரா நிலத்தின் பூர்வீகக் குடிகளான நனவால் இனக்குழுவைச் சேர்ந்த அனைத்து முன்னோருக்கும்,
இன்றிருக்கும் மூத்தவர்களுக்கும் எனது மரியாதையையும், நன்றியையும் செலுத்துகிறேன்.
ஆழியாள்
21/10/2017