முகப்பு > பதிவுகள் > கொம்பூச்சா

கடந்த வருடத்திலிருந்து நண்பர்கள் கொம்பூச்சாவை உணவுப்பழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். பெயரே கொஞ்சம் இடக்குமுடக்காக இருக்கிறதே அது என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ள நண்பி 'KT'யைக் கேட்டேன். அது தேயிலைச் சாயத்திலிருந்து செய்யப்படும் பானம் என்று அவர் சொன்னதும் எனக்குள் உற்சாகம் பிறந்தது. 'டீ' என்றால் சிலோன், சிலோன் என்றால் 'டீ' என்று ஒருகாலத்தில் உலகின் மொத்தத் தேயிலை உற்பத்தியில் முன்னணியில் இருந்த நாடு இலங்கை அல்லவா! தேயிலையை இலங்கையிலிருந்து Ceylon Tea என்ற பெயரில் வெள்ளைக்காரர் - கிழக்கிந்தியக் கொம்பனிக்காரர் உலகமெல்லாம் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.

இந்தப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையால் - பெருந்தோட்டப் பயிர் செய்கைக்கு மிகவும் இன்றியமையாத மலையக மக்களின் உழைப்பால் இலங்கைக்குக் கிடைத்த/ கிடைக்கும் வருமானம் மிகக் கணிசமானது மட்டுமல்ல, இப் பயிர் சிறியதொரு நாடான இலங்கையை உலக வரைபடத்தில் முக்கியமாகக் குறித்துச் சொல்லக் கூடிய நாடாக அடையாளப்படுத்தியிருக்கிறது. பிற்காலத்தில் தேயிலையை விட வேறு பல துயரந்தரும் விடயங்களுக்காக இலங்கை உலக வரைபடத்தில் அடையாளப்படுத்தப்பட்டதும் உண்டு என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

கடுந்தேத்தண்ணி, பால்த்தேத்தண்ணி என்று இருவகைகளைத்தான் சிறுவயதுகளில் ஊர்ப்பக்கம் அறிந்திருக்கிறேன். இடைக்கிடையே இஞ்சி தட்டிப்போட்ட தேத்தண்ணியும், என்றைக்கோ ஒருநாள் எதுவுமில்லாத திருவிழாவாய் ஏலக்காய் போட்ட தேத்தண்ணியும் தருவார் அம்மா.

ஆனால் அவுஸ்திரேலியாவில் இன்றைக்கு கிடைக்கும் எத்தனையோ வகைத் தேயிலைகளையும், தேநீர் வகைகளையும் நாளுக்கொன்றாகக் குடித்தால் கூட அத்தனை வகைகளையும் குடித்து முடிக்க ஒரு வருடம் போதாது போல எனக்குப்படுகிறது. அப்பாடா எத்தனை ரகம்! கொழுந்துகளாக வேண்டுமா, மொட்டுகளாக வேண்டுமா, இலைகளா, எந்தப்பருவத்து இலைகள் வேண்டும், அரைக்காமலா, அரைத்ததா; அரைத்ததாயின் எப்படி அரைத்திருக்க வேண்டும், எப்படிக் காயவைத்தது வேண்டும், எந்தத் தரத்தில் சாயம் வர வேண்டும், எந்த மலையில், எந்தப் பிரதேசத்தில் விளைந்திருப்பது வேண்டும், பந்துபோல சுருட்டியதா, முத்துப்போல உருண்டதா, ஊசிபோல நீண்டதா, இப்படித் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே போகலாம்.

நாம் கொம்பூச்சாவுடன் நிற்போம். கொம்பூச்சாவை நொதித்த தேநீர் என்று சொல்லலாம். கொம்பூச்சாவின் பூர்வீகம் சீனா. பல தலைமுறைகளாக சீனாவில் இதைப் பாவித்து வருகிறார்கள். சமிபாட்டுக்கும், வயிற்றுக்கும் உகந்தது கொம்பூச்சா என்று அவர்கள் ஆண்டாண்டு காலமாக அறிந்திருக்கிறார்கள். இன்றைக்கு விஞ்ஞான விளக்கங்களுடன் கொம்பூச்சாவில் காணப்படும் probiotics எனப்படும் வயிற்றுக்கு நன்மை பயக்கும் பக்டீரியாக்களும், ஈஸ்ட் நுண்ணுயிர்களும், B வகை விற்றமின்கள் மற்றும் antioxidants என நீளும் பட்டியலைப் பற்றி அன்றைய காலத்தில் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் உடலுக்கு நன்மை பயக்கும் என்று பாவித்திருக்கிறார்கள்.

இன்றைக்கு சந்தையில் இருக்கும் குளிர்பானங்கள் பலதிலும் சீனிப்பாகை அளவுக்கு மீறி ஊற்றி, செயற்கை நிறமூட்டி, இன்னும் என்னவெல்லாமோ கலந்து, நெளிந்து வளைந்த பிளாஸ்டிக் போத்தல்களில் வைத்திருக்கிறார்கள். இக் குளிர்பானங்களை நவீன விற்பனை உத்திகளோடு சந்தைப்படுத்தி, அவற்றில் ஒரே ஒரு மிடறைக் குடித்தால் போதும் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்று குடித்தவரைத் திரும்பிப் பார்ப்பது போலவும் அவரின் உடல் முழுவதும் புத்துணர்ச்சியும், உற்சாகமும் கொப்பளிப்பது போலவும் பல விளம்பரங்களைப் பார்க்கிறோம். உலக வணிக சந்தையானது, மக்களின் சுவையறியும் நாவை தனதாக்கிக் கொள்ள எப்படியெல்லாமோ முயல்கிறது. அச் சந்தையின் முழு நோக்கமும் பணம்! பணம்! பணமே ஒழிய மக்களின் நலம் அல்ல.


இந்தச் செயற்கைக் குளிர்பானங்களை விட இளநீர், பதனீர், பாணக்கம், நீராகாரம், மோர், தேநீர், பருத்திப்பால் போன்ற பானங்கள் உடலுக்கு நன்மை தருபவை. இவற்றோடு கொம்பூச்சாவையும் நாமே செய்து பழகுவோம். உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுவோம். கொம்பூச்சாவின் நொதித்த சுவையும், மணமும் பழகப் பழகத்தான் பிடிபடும். பழகப் பழக கொம்பூச்சா இனிக்கும்!!!

நன்றி: எதிரொலி