மண்ணில் பல நூறு வருடங்களாக ஆணின் அதிகாரத்திற்கும் வசதிக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த மொழியை, தன் விடுதலைக்கும் படைப்பூக்கத்திற்கும் பயன்படுத்தும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது தான் பெண்ணினத்தின் வெற்றிகளில் இன்று வரை முதன்மையானது. அதை முழுமையான இலக்கிய வடிவத்திற்கு உட்படும் தேர்ச்சியில் வெற்றியடைந்ததன் வழியாக, மொழியை ஒரு சாணைத் தீட்டப்பட்டக் கத்தியாகவும் ஆக்கினர். இனி, அம்மொழியின் இலக்குகளிலிருந்து தப்பவே முடியாது என்பதையும் உறுதிப்படுத்தினர். அந்த இலக்கிய வடிவங்கள், ஆணின் இலக்கிய நாற்காலிகள் முன்மொழிந்த தகுதிகளை முற்றிலுமாகப் புறக்கணித்ததுடன் அவற்றிற்கெதிரான வேறு தகுதிகளுடனும், அவற்றையும் மிஞ்சிய திறன்களுடனும் எழும்பி வந்தன. ஆண், கவிதை என்று சொல்லி வந்ததைப் புறம் தள்ளி, புத்துயிர்ப்பு உடைய மொழியால் ஆன கவிதையைப் படைத்ததில் இலக்கிய வரலாறு என்பது தலைகீழாகத்தான் ஆகிப்போனது.
கடந்த நூற்றாண்டில், ஈழத்துப் பெண்கள் அனுபவிக்க நேர்ந்த அரசியல் வன்முறைகள் அவர்களின் மொழியை இன்னும் இன்னும் கூரடைந்த ஆயுதமாய் ஆக்கியது. அதன் தாக்கமும், புழக்கமும் தமிழகத்தில் ‘பெண்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருந்தவர்களின் மொழியைக் கூடப் புதுப்பித்தது. தமிழகத்தில் நவீனப்பெண்கள், அரசியல் சிந்தனைகளிலிருந்தும் சித்தாந்தங்களிலிருந்தும் தங்களை விலக்கி வைத்துக் கொண்டவர்களாகவோ, அல்லது அவ்வாறு தங்களை அவ்விடம் நிறுத்திக் கொண்டவர்கள் மலிவான சித்தாந்தங்களை முன்மொழிந்தவர்களாகவோ அல்லது தனைத் தவிர்த்தப் பெண்கள் பற்றிய அரசியல் இருப்பு பற்றிய அக்கறைகள் அற்றவர்களாகவோ இருந்தனர். ஆனால், ஈழப் பெண்கவிதை மொழி, இப்பணிகளையெல்லாம் முழுவீச்சில் செயல்படுத்தும் தூண்டுகோலாகவே இன்று வரை இருந்திருக்கிறது. அரசியல் விளைவுகளை நேரடியாக அனுபவிக்க நேர்ந்ததின் அவலம், மொழி வழியானதொரு தீவிரமான இலக்கிய வகைமையாக ஈழப்பெண் கவிதை இன்று வரை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. அதை, ‘ஈழப் பெண் கவிதை’ எனும் சொற்தொகுதியால் ஆக்கும் போது அதன் அரசியல் வெளிச்சம் இன்னும் அதிகமாய் வாசிக்கும் எவரையும் கண்கூசச் செய்யக் கூடியதே!
2000 – ஆண்டில் வெளியான, ஆழியாளின் ‘உரத்துப் பேச’ , கவிதைத் தொகுப்பு மேற்கண்ட அரசியல் முன்னெடுப்பை தனது தனித்ததொரு மொழியாகவும் குரலாகவும் பதிவு செய்தது. எதிர்ப்பின் குரலும், மானுட அவதானிப்பைத் தொடர்ந்து நிகழ்த்தும் குரலும் அப்படித்தான் உரத்துப் பேசும் என்பதையும் அவரின் முழு தொகுப்பிலிருந்தும் நம்மால் உணரமுடியும். சொற்களுக்குப் புதிய அரசியல் வெளிப்பாடுகளை கொடுத்தவர்களுள் இன்று வரை ஈழத்தமிழ்ப் பெண் கவிஞர்களே முதன்மையாக நிற்கின்றனர் என்பதை இவர் கவிதைகளிலிருந்தும் நாம் உணரக்கூடும். ஆழியாளின் மொழியில், ‘மன்னம் பேரிகள்’ கவிதை மிகவும் நேரடியான பாலியல் அரசியல் உடையது. அக்கவிதை சொல்லிய சேதியை மீள் பிரதியாக்கியே கவிஞர்களாகியவர்களையும் இவ்விடம் நான் நினைவூட்டக்கூடும். இதுவும் ஆரோக்கியமான விஷயமே!
மன்னம்பேரிகள்
காலப்பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்திச் சந்தைகளில்
பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்.
நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.
தந்திக் கம்பத்தருகே
கால் தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம்மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்.
அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.
அழகி மன்னம்பேரிக்கும்*
அவள் கோணேஸ்வரிக்கும்**
புரிந்த வன்மொழியாகத் தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.
அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் – நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்து கொண்டேன்.
அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.
* மன்னம்பேரி (22) 1971 ஜே.வி.பி.கிளர்ச்சியில் பங்கு கொண்டவள். பெண்கள் அணிக்குத் தலைமை தாங்கியவள். 1971 ஏப்ரல் 16 – இல் மன்னம்பேரி படையினரால் கைது செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்.
** கோணேஸ்வரி (33) அம்பாறை சென்ட்ரல் கேம்ப் 1ம் காலனியைக் சேர்ந்தவள். 1997 மே 17 இரவு, இவரது வீட்டுக்குச் சென்ற படையினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய பின் அவளின் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்துச் சென்றனர்.
ஆண்களின் பாலியல் வன்முறையை, பாலியல் அரசியலாக்குவதில் அதிலும் அத்தகைய இலக்கியமாக்குவதில் இன்றும் பல பெண்கள் தோற்றுப் போகின்றனர். அது அவரவர் உணர்வின் நேர்மையையும், தன் இனப்பெண்கள் சார்ந்த ஒருமையையும் பொறுத்தது. ஆழியாள், ‘என்னை உற்றுக் கிடக்கும் அம்மிருகம் துயின்று நாட்கள் பலவாகியிருக்கும்’ என்ற வரியால் அதன் வழியாகச் சொல்லும் பாலியல் நுட்பத்தால் அந்த அரசியல் நிலைப்பாட்டின் அடுத்த நிலைக்குக் கடந்து செல்கிறார். அம்மொழியின் உருவாக்கம் வீரியம் பெறுவதற்கான தெளிவான சித்திரங்களை தன் ஒவ்வொரு கவிதையிலும் தொடர்ந்து கொண்டே இருப்பது ஆழியாளின் பலம். கவிதையை தான் நுகர்ந்த வெறும் சுகானுபவமாக மட்டுமே பதிவு செய்யாமல், இலங்கும் அதிகாரக் கட்டமைப்புகளுக்கு எதிரான கருத்தாக்க அமைவுகளைத்தாம் கவிதைகளாக்குகிறார். முழுமையான அதிகாரக் கட்டமைப்பைத் தகர்க்கும் பலமிருந்தாலன்றி இது சாத்தியமில்லை. நுண்மையான கருத்தாக்கச் சித்திரங்களை ஒவ்வொரு கவிதையிலும் வரைந்து கொண்டே இருக்கிறார். அவ்வகையில் பாலியல் நுண்ணுணர் திறனை முழுமையும் கொண்ட ஒரு பெண்ணியக் கவிஞராக அடையாளம் பெறுகிறார்.
பதில்
என் ஆதித்தாயின்
முதுகில் பட்ட
திருக்கைச் சவுக்கடி
நான் காணும் ஒவ்வொரு
முகத்திலும்
தழும்பாய் தேமலாய்
படர்ந்து கிடக்கிறது.
அடையாளத்தை
உணரும் போதெல்லாம்
வீரியங்கொண்ட
ஊழிச்சவுக்கின் ஒலி
மீளவும் என்னை
வலிக்கப் பண்ணும்.
என்னைப் பிளந்து
ரத்த உடுக்கள்
வெடித்துப் பறந்து
தனித்துச் சிதறி கொட்டும்.
தனித்து,
அவை ஒவ்வொன்றும்
கிரகங்கள் என
உருப்பெறும்.
தன்னிச்சையாய்ச் சுற்றி வரும்
தாள லயத்துடன்.
அங்கு
எனக்கென
ஓர் பிரபஞ்சம் உருவாகும்
அப்போது உயிர் பெறும்
எனக்கான வரிவடிவங்களுடன் கூடிய
என் மொழி.
அதன் பின்
தேமல் படர்ந்த எவனாயினும்
என்னோடு உரையாடட்டும்
அப்போது கூறுகிறேன்
பதிலை,
என் மொழியில்;
என் ஆதித்தாயின்
பெண் மொழியில்.
அதுவரை நீ காத்திரு.
‘பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம். அரசு, யுத்தம், குடும்பம், தேசிய விடுதலைப் போராட்டங்கள் போன்றவை இந்தியா உட்பட்ட நாடுகளிலும் பெண்ணுக்கு எதிரான அதிகாரக்கட்டமைப்புகளுடன் தாம் உருவாக்கம் பெற்றிருக்கின்றன. ஆணாதிக்கத்தின் விளைச்சல்களாகவே அவை அடையாளமும் பெற்றிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அத்தனை விடுதலைப் போராட்டங்களும், மக்களை ஒடுக்கும் பேரதிகார அடையாளங்களுடனேயே நாளடைவில் இணக்கம் பெற்று, பெண்களை முற்றிலுமாக ஆண்களிடமிருந்து விலக்கிவைத்து நோக்கும் போக்கையே கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கவிதை இயக்கச் செயல்பாடு என்பது சமீபத்திய காலத்தில் ஒரு முக்கியமான அரசியல் பங்கெடுப்பைக் கொண்டுடிருக்கிறது. அரசின் சுவர்களுடன் நேரடியான மோதுதலை நிகழ்த்தும், படைப்பூக்கத்தை விரயமாக்கும் பணியை ஆழியாள் போன்றவர்கள் ஆற்றவில்லை. மாறாக, அரசு எனும் அதிகாரக் கட்டமைப்பின் ஆதிக்கச் சுவர்கள் சதுரமாக, செவ்வகமாக, முக்கோணமாக என வெளியைக் குறுக்கும் திடமான தன்மைகளுடன் செறிவடைந்து இருப்பதைக் கலைக்கும் வேலையைத் தமிழில் பெண் கவிதை தான் செய்துள்ளது. அரசுடன் மோதுவது வெவ்வேறு முகமூடிகளுடன் வரும் மனிதர்களையெல்லாம் மூடியைக் களைந்து அடையாளம் காணும் நோக்கத்தின்பாலது. எத்தனைக் கோடி முகமூடிகளைக் கிழித்துக் கொண்டிருப்போம், நாம். ஆக, நிஜமான போலியகன்ற முகங்களை உருவாக்குவதில் தம் நேர்மையான உழைப்பைக் கடந்த இரு பத்தாண்டுகளாகக் கவிப் பெண்கள் தொடர்ந்து ஆற்றிக்கொண்டே வருகின்றனர்.
ஆழியாள், மொழியின் அதிகாரப் பயன்பாடுகளைத் தன் கவிதைகள் வழியாக அழித்தவாறே சமூகத்தின் அதிகாரக்கட்டமைப்புகளையும் தன் தீவிரமான மொழியால் தகர்க்கிறார். எல்லாவற்றையும் மீறிப்போய், சமூகத்தில் பெண்ணுடல் என்பது அருவக் குறியீடுகளாய் இயங்கும் முறைகளையும் கவிதைகளாக்குகிறார். இதுவரை பெண்ணின் உடல் ஆணாதிக்க, சாதியாதிக்க, வர்க்க ஆதிக்க நுகர்தலுக்கு ஊட்டமளிக்கும் குறியீடுகளாகவே இருந்து வந்திருக்கிறது. இத்தகைய அழகியலையும் குறியீட்டு இயலையும் சிதைப்பதும் கவிதையின் பணி என்பதை உணர்ந்தவராக பெண்ணின் உடலை மாற்று, எதிர்ப்புக் குறியீடுகளாக்கி, அவ்வாறு அணுகும் மொழி, கவிதை அமைப்புகளுடனும் வருகிறார். ஆழியாளின் இத்தகைய கவிதைச் செயல்பாடும், அவர் தன் கவிதைகளில் விரித்துத் தரும் உணர்வெழுச்சியும், அவ்வரிகளின் அடியில் பாயும் உணர்ச்சி நீரோட்டமும் வாசிப்பவர் தம் உணர்விழந்த நிலையிலும் அக்கவிதைகளுடன் இயங்க வல்லவையாக இருக்கின்றன. இதனால், வாசகர்கள் மனதில் பதிந்து புரையோடிப் போயிருக்கும் குறியீட்டு வடிவங்களையெல்லாம் சிதைத்து, அவர்களுக்கு புத்துயிர்ப்பான விடுதலைக் குறியீடுகளையும் வழங்குகின்றன. இன்றைய காலப்பாதையில் இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் எல்லோருமே அப்படித்தான் இந்த நெடுஞ்சாலையை வந்து சேர்ந்திருக்கின்றனர்.
ஆழியாள், ‘பாதுகாப்பு’ என்ற கவிதையிலும் அதற்குப் பதிலைக் கொண்டதாக, ‘தடை தாண்டி’ என்ற கவிதையிலும் அப்படியானதொரு கட்டிட வேலையைத் தான் செய்திருக்கிறார். இரண்டு கவிதைகளிலுமே உடல் என்பது வேலியாக மாறும் தருணங்களை ஒப்பு நோக்கி நாம் இதைப் புரிந்து கொள்ளலாம்.
பாதுகாப்பு
உடலில் பட்ட ரணங்கள் ஆறுமுன்னே
ஆழக்கோடுகள் அதன் மேல் கிழித்து
கூராய்ச் செதுக்கிய கதிகால்களை நட
படுநேராய் எழுகிறது வேலிகள்.
தோல் மினுமினுத்துச் செழிக்க
மார்பின் பருக்கைகள் திரட்சிகளாகும் போது
சோடிக் கண்களால் உன்னை மேய்ந்தபடி
அவை கூடாரம் அமைத்துக் காத்திருக்கின்றன.
பருவ கால மாற்றமதில்
மாரித் தவக்கைகளும் மயிர்க்கொட்டிகளும்
வந்து போய்க்கொண்டிருக்க,
கொலைஞன் ஒருவனின் கூர்க்கத்தி முனையைப் போல்
வளரும் எட்டு வாரக் கரு உருவில்
வயிற்றின் கொழகொழத்த சதை இடுக்குகளுள்
புகுந்தபடி
சொகுசின் கணச்சூட்டில்
வேலிகள் ஆழமாய்ப்
புதைந்து பதிகின்றன.
அருகில் ஆங்காங்கே
இன்னமும் வேலிகள்
வெளிர் பச்சையாய் முளைவிட்டுக் கிளம்பியபடி
வழிபாதை நெடுகிலும் சாரிசாரியாய்ச்
சாரிசாரியாய்….
உன் கண்பாப்பாக்கள் சலித்துக் குறுகி இருளும் வண்ணம்
மனம் எட்டும் பரப்பெங்கும் விரிந்து கிடக்கின்றன.
நீ நினைத்திருக்கலாம் அவை தாண்டுவதற்கென்று.
அவை காத்திருக்கின்றன
தோல்க்கூடாரத்தினுள்.
சிறுகச் சிறுக அரித்து அறியாக்கணத்தில்
உன்னுள் புகுந்து
முழுதாய் விழுங்கி ஏப்பம் விடுவதற்காகவே.
---------------------------------------------------------------------
தடை தாண்டி
என் ஆத்துமமும் அறிவும்
முழு உள்ளமும், இந்த ஊனும்
உன்னை நோக்கியபடிக்குப்
பனிப்புகையாய் மேலெழுவது
புரிகிறது எனக்கு.
இவ்வுணர்வுகளுக்கு
வேலியிட்டுப் பாத்தி கட்டிப்
பெயரிட நான் தயாரில்லை.
நீயும் நானும்
வரையறைகளைக் கடக்கவேண்டும் – நான்,
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்கவேண்டும்.
எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என்ற புரிதலோடு
வா!
ஒன்றாய்க் கடப்போம்.
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீரியத்தோடும்
2006 - ம் ஆண்டு வெளிவந்த, ‘துவிதம்’என்ற தனது இரண்டாவது தொகுப்பின் வழியாக இன்னும் ஆழமான பெண்ணிலை வாதத்தளங்களை துழாவும் உழைப்பையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆழியாள். ‘துவிதம்’ என்பது இருமை என்று பொருள் பெறும். பாலியல் உறுப்புகள் அல்லது பாலியல் விழைவை நேரடியான விளிப்பாக்கி முன்வைக்கும் கவிதைகள் தமிழ் நவீனக்கவிதையில் ஒரு பெரிய தவிர்க்க இயலாத பரப்பாகிய பின்னர், அதன் அர்த்தமற்ற கவனச்சிதறடிக்கும் விவாதங்களால் கவனக்குவிப்பு பெறாமல் போகும்படி, உள்ளிருந்தும், வெளியே இருந்தும் எதிர்த்து இயங்குபவர்களுக்கு மத்தியில், ‘ஆழியாள்’ கவிதைகள் தெளிவாகத் தன் சித்தாந்தத்தை வரையறுத்தவாறே அதன் அழகியலும் எதிர்ப்புக்குரலும் மலினமுறா வண்ணம் மேலெழுந்து நகர்கின்றன. தான் எடுத்துக்கொண்டிருக்கும் பணியில் ஆழமான அக்கறையும் தொடர்ந்த மெனக்கெடலும் இருந்தாலன்றி இது சாத்தியமில்லை. ‘காமம்’ கவிதை அத்தகைய முன்னகர்வின் முதன்மையான மைல்கல்லாக இருக்கிறது.
காமம்
உயரும்
மலையடிவார மண்கும்பிகளுள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்
பள்ளங்களின்
ஆழப் புதைவில்
அலறி ஓயும் குரல்களின்
இறுதி விக்கல்களும்
உண்டு இங்கு.
சுவருக்கு செவிகள் உண்டு.
இருளுக்குக் கூர்விழிகளும் உண்டு.
பீறிக் கசியும் இரத்தமாய் மேலும்
உண்டு இன்னொன்று
அவளுக்கு.
இக்கவிதை, பெண்ணின் காமம் என்ற உணர்ச்சியைப் புறக்கணித்ததைக் குறிக்கும் கவிதை. அதே சமயம் அதன் மூல அரசியல் தோன்றும் இடத்தை எளிதான சொற்களால் சென்று அடையவும் செய்கிறது. பெண்ணின் காமம் நசிபடும் இடங்கள் இலக்கியங்களில் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் பட்சத்தில், அதைப் பெண்களின் பொதுப் பிரச்சனையாக்கிப் பேசும் ஆழியாளின் இக்கவிதை தமிழ்ப்பாலியல் அரசியலின் நிகழ்நிலையைச் சுட்டிக் காட்டுகிறது. என் ஆதித்தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி உருவாக்கிய ஓலங்கள் தாம் சொற்களாகி கவிதையின் குரல்களாய் ஆகிறதோ எனும் அளவிற்கு அவ்வலியையும் விடுதலைக்கான மன அவசத்தையும் தெளிவான நடை நயத்தில் பதிவு செய்திருக்கிறது இக்கவிதை.
பெண்ணியத்தின் பொது வரையறையை அடைய முடியாதபடிக்கு, பெண்ணின் அடையாளங்கள் சிதறுண்டு பல்கிப்பெருகிக் கிடப்பதைப் பலமுறைகள் நாம் பேசு பொருளாக்கியிருக்கிறோம். இதனால், பெண்ணிலைவாதத்தின் திரட்சியை எட்டுவதற்கான ஒருங்கிணைவைப் பெண்கள் அடைய முடியாமலேயே போய்விடுகிறது என்பதையும் உணர்ந்திருக்கிறோம். அடையாள அரசியல் பெரும் விவாதமாக மையத்தளத்தை ஆக்கிரமித்த போதெல்லாம், அடையாளங்களில் இளைத்ததும் ஒடுக்கப்பட்டதுமான அடையாளத்தை ஒரு கொடியாக உயர்த்திப்பிடிக்கும் சித்தாந்தத்தையே நாம் கையில் எடுக்க வேண்டும். இத்தகைய தவிப்பு நிலையையும் தன் ’அடையாளம்’ கவிதையில் துல்லியமாகக் குறிப்பிட்டிருக்கிறார், ஆழியாள்.
அடையாளம்
பிறந்த வீட்டில்
கறுப்பி
அண்டைநாட்டில்
சிலோன் அகதிப்பொண்ணு
இலங்கையர் மத்தியில்
‘தெமள’
வடக்கில்
கிழக்கச்சி
மீன்பாடும் கிழக்கில்
நானொரு மலைக்காரி
மலையில்
மூதூர் காரியாக்கும்
ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாக இருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா
பழையபடி நானொரு கறுப்பியானேன்.
‘ஆழியாளின்’ தொகுப்புகள் சிந்தனைக்கு ஒரு பெருவிருந்து தான். எல்லா கவிதைகளையும் குறிப்பிட்டுச் சுவைப்பதற்குப் போதுமான கட்டுரை வெளி இங்கு இல்லை என்பதால் இவ்விடம் நிறுத்திக் கொள்கிறேன். என்றாலும், வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு, அவரது இரு கவிதைத் தொகுதிகளையும் முழுமூச்சாய் வாசித்து விடும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பெண் விடுதலை, பாலியல் அரசியல் போன்ற அரசியல் தெளிவுகளை, நுட்பங்களை நாம் பெற அம்முயற்சி உதவியாக இருக்கும். இத்தகைய வாசிப்பின் நிறைவில் எனக்குப் பிடித்தமான தனித்த ஒரு கவிதையையும் நான் கண்டுகொண்டேன். அழகியலிலும் படிமக் கட்டமைப்பிலும் நேர்த்தியான கவிதை. மொழியின் வீச்சில் சீராகப் பறந்துச் சென்று மனக்கூட்டுக்குள் சொற்களாகச் சிதறும் கவிதை. என்றாலும், ஒரு காட்சியை நம் எல்லோருக்கும் கண்களுக்குள் பத்திரப்படுத்தி நகரும், ‘இரை’ என்ற கவிதை.
இரை
பரிணாமம் கட்டியெழுப்பியிருந்த
அப்புராதன வீட்டின்
விட்டத்திலிருந்து
நூல் இறக்கிக்
கூடு இழைத்துக்
காத்திருக்கிறது இமைச்சிலந்தி
வெட்ட வெட்ட விழித்தபடி
விரிந்த கூடே அதன் பார்வையாய்
அதன் வழியில்
மணமூறும் லவெண்டர் பூக்களைக்
கொத்தாய் அள்ளி முகர்ந்தபடி
சில்லென வீசி நகர்ந்த
முன்பனிச் சாரற் காற்றில்
அந்தி பொழுதோ சறுக்கி விழ,
வீட்டின் தொடர்வேலி
மலைத்தடுப்புக்களிடையே,
சிக்கிக் கிடந்த சூரியனைக்
கவ்விக் கண்மூடியது இமைச்சிலந்தி.
நன்றி :koodu.thamizhstudio.com
March 2011