'மறு' வெளியீடாக வந்துள்ள கவிதைத் தொகுதி ஆழியாளின் 'உரத்துப் பேச'. ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆணாதிக்க அடக்குமுறைக்குள்ளாக்கப் பட்டு வந்துள்ள பெண்ணினத்தின் உணர்வுகளைப் படம் விரிக்கும் கவிதைகள். ஆழியாள் உரத்தே பேசியிருக்கின்றார். பெண்ணியக் கவிதைகள், மொழி பெயர்ப்புக் கவிதைகள் இவற்றுடன் பாப்பாப் பாட்டுகளென விரிகிறது கவிதைத் தொகுதி. 'கடற்கரை உலா' என்றொரு கவிதை. கட்டுகளை, கால் விலங்குகளை மரபாகக் கொண்டு வாழும் சமூக அமைப்பில், பெண்கள் கட்டுகளை மீறும் போது 'கற்பு கால் வழியே போகிறது எனக் கூவாதே வீணே' எனத் தாய் மகனைப் பார்த்து அறிவுரை கூறுவதாக அமைந்துள்ள கவிதை. இந்தக் கவிதையிலுள்ள முக்கியமான சிறப்புகளிலொன்று: ஒரு தாய் தன்னைப் பெண்களின் பிரதிநிதியாக வைத்துக் கொண்டு, மகனை ஆண் வர்க்கத்தின் பிரதிநிதியாக உருவகித்துக் கூறுவதாக வடிக்கப் பட்டுள்ளதே. பொதுவாகத் தாய்மார்கள் தாங்கள் பெண்கள் என்பதை மறந்து விட்டுத் தங்கள் புதல்வர்களுக்காக பல இலட்சக்கணக்கில் சீதனைத்தை அள்ளுவதில் குறியாகவிருப்பதும், காலத்தால் செல்லரித்துப் போன பெண்கள் பற்றிய சமூகத்தில் நிலவும் கருதுகோள்களை அவர்களே தங்கள் மருமகள்மார்மீது திணிப்பதில் முன்னணியில் நிற்பதும் அன்றாட நிகழ்வுகளாக நாம் அறிந்தவைதான். காண்பவைதான். இந்நிலையில் இக்கவிதையில் வரும் தாய் ஒரு புரட்சிகரத்தாயாகத் தன் மகனைப் பார்த்து
'அவர்கள்
அவர்களாக அவிழும்போதும்
முடிச்சுகளை அவிழ்க்கும் போதும்
கற்பு கால் வழியே போகிறது
எனக் கூவாதே வீணே'
என அறைகூவல் விடுப்பது வித்தியாசமானது மட்டுமல்ல விரும்பத்தக்கதும் தான். இது போல் 'தடை தாண்டி'யில் வரும் காதலியும் தன் உள்ளம் கவர்ந்தவனைப் பார்த்து 'எனினும் என் கருவறையை நிறைப்பது உன் குறியல்ல என்ற புரிதலோடு வா' என்று அறிவுரை கூறி வரவேற்கின்றாள். 'நீயும் நானும் வரையறைகளைக் கடக்க வேண்டும்' என்று வரையறைகளை இருவருமே கடக்க வேண்டுமென்ற தெளிவுள்ள காதலி இவள்.
1971 ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட 'சேகுவேரா' கிளர்ச்சியின் போது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்டுப் படுகொலை செய்யப் பட்ட கதிர்காம அழகி மன்னம்பெரி பற்றியும் அண்மையில் இலங்கை இராணுவத்தால் பிறப்புறுப்பில் கிரனட் வீசிக் கொல்லப் பட்ட கோணேஷ்வரி பற்றியும் கூறும் 'மன்னம்பெரிகள்' கவிதை முக்கியமான சரித்திர நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது.
'நிஜம்' என்றொரு கவிதை...எத்தனை தலைமுறைகள் கடந்தென்ன, எத்தனை விதிமுறைகள் ஆக்கியென்ன பெண் என்பவள் இன்னும் ஆணைப் பொறுத்தவரையில் ஒரு போகப் பொருளாகவேயிருக்கிறாளென்பதை
'எத்தனை தலைமுறைகள் போக்கினீர்?
எத்த்னை விதிமுறைகள் ஆக்கினீர்? - இன்னும்
பெண் போகமா உமக்கு?
போக்கிடமே இல்லையா அவளுக்கு?
என்றொரு வினாவெழுப்பி நடைமுறையை இடித்துக் காட்டும். பெண்ணின் நிர்வாணத்திற்காக அலையும் ஆணினத்தைப் பார்த்து,
'நிர்வாணமாய்
நிஜத்திலும் நிஜமாய்
உள்நோக்கி உம்மை ஒருகாலும் பார்த்ததே இல்லையா?
முதலில் உம்மை உற்று
உள்நோக்கிப் பாருமைய்யா, பாரும்?'
என்று சிந்திக்க வைக்குமொரு கேள்வியினை எழுப்பும். 'கடற்கரை உலா'வென்னும் கவிதையில் பெண்களுக்காகத் தன் மகனைப் பார்த்தே குரல் கொடுக்குமொரு தாயைப் பார்த்தோம். இதற்கு மாறாகத் 'தேவைகள்' என்னும் கவைதையில் காலங்காலமாக அடக்கப் பட்டு அதுவே வாழ்வெனத் திருப்தி கொள்ளும் பெண்ணினத்தின் பிரதிநிதியாக விளங்கும் தன் தாயைப் பார்த்து
'குசினித் தேநீர்க் கோப்பைக்குள்
ஊறிப் பருத்துக் கிடக்கும் உன் தலையையும்
அம்மன் கோயிலில் சரணாய்க் கிடக்கும் - உன்
கால்கள் ஒரு சோடியையும்
உடலில் பொருத்தி,
ஊருக்கு வெளியே வந்து பார் -'
எனத் தாயை வெளியில் வர அழைத்துப் பெண்ணியக் குரலெழுப்பும் மகளைக் காண்கின்றோம்.
'பதிவுத் தபால்' கவிதை ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறான ஓரபட்சச் சார்பான கருதுகோள்கள் நிலவுவதை ஒருவிதக் கிண்டலுடன் சுட்டிக் காட்டி விமர்சிப்பதாக அமைந்துள்ளது. மொத்தத்தில் பெண்களின் விடுதலைக் குரலாக ஒலிக்கும் கவிதைகளை அதிகமாகக் கொண்ட நூலில், மிகவும் தீவிரமான காத்திரமான விடயங்களைக் கொண்டுள்ள கவிதை நூலில் எதற்காக நூலாசிரியை 'பாப்பாப் பாடல்களை'க் கொண்டு வந்து வலியத் திணிக்க வேண்டும். பாப்பாப் பாட்டுகளை யாருக்காக ஆசிரியை இங்கே தொகுத்துள்ளார்? குழந்தைகளுக்காகவென்றால்...ஆழியாளின் 'உரத்துப் பேசல்' அதற்குப் பொருத்தமாகப் படவில்லையே. வயதானவர்களுக்காகவென்றால் பாடல்களின் நடை, தொனி அதற்குச் சார்பானதாகவிருக்கவில்லையே.