Logo

ஆழியாள்

aazhiyaal.net



  • முகப்பு
  • கவிதை
  • எழுத்தைப்பற்றி
  • பதிவு
  • நிகழ்வு
  • ஏனையவை
  • சிறுகதை
  • தொடர்பு

இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த மதுபாஸினி ஒரு கவிஞர் மட்டுமன்றி ஒரு சிறந்த மொழிபெயர்பாளரும் கூட. இவர் ஆழியாள் எனும் பெயரில் தனது கவிதைப் படைப்புகளை, "உரத்துப் பேச, துவிதம்,கருநாவு" போன்ற கவிதைத் தொகுப்புகளாக வெளியிட்டிருக்கும் அதேவேளை ,பிற மொழிக் கவிதைகளிலும் ஆர்வம் கொண்டவர். இவரது படைப்புகளும் ஆங்கிலம், மலையாளம்,கன்னடம், சிங்களம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

அந்தவகையில் இவரது மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பொன்று 2017 நவம்பர் மாதம் புதுச்சேரி அணங்கு பெண்ணியப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருந்தது. அது அணங்கு பதிப்பகத்தின் எட்டாவது பதிப்பாகும். இந்நூலின் அட்டைப்படத்தை நரேந்திரன் அவர்கள் பொருத்தமாகவும் அருமையாகவும் வடிவமைத்திருக்க ஒரு நேர்த்தியான மொழி பெயர்ப்பு நூலாக அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் கவிதைகள் தொகுப்பு உருப் பெற்றிருந்தது. இத்தொகுப்பில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த 36 கவிதைகளும் 29 அவுஸ்திரேலிய ஆதிக்குடிக் கவிஞர்களால் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆழியாளின் ஆசையாலும் விடா முயற்சியாலும் இவை தமிழுருப் பெற்று நம் கைகளில் தவழும் இந்நூல் அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் எண்ண ஓட்டத்தையும், வாழ்க்கை முறையையும் தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டின.

இக்கவிதைகளைப் படிக்கும் போது ஆதிக்குடிகள் தமது உரிமைக்காக இறுதிவரை போராடிக் கொண்டேதான் இருந்தார்கள் என்பதும் ஒரு இனத்தை அழிக்க எவ்வகையான சித்திரவதைகள், அடக்குமுறைகள், தந்திரோபாயங்கள் பயன்படுத்தப் பட்டன என்பதும் தெள்ளத் தெளிவாக அறியக் கிடைக்கின்றன.

அவர்களின் நிறம் ஒரு பிரச்சினையாக இருந்ததை அவர்களின் ஒவ்வொரு கவிதைகளும் எடுத்துக் காட்டின.அத்துடன் ஆதிக் குடிகள் சண்டைகளை விரும்பவில்லை என்பதையும் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்திற்கு அவர்கள் தயாராகவும் இருக்கவில்லை என்பதையும் தங்கள் கைகளில் வேட்டைக்குப் பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமே இருந்தன எனக்கூறும் கவிதையில் இருந்து அறிய முடிந்தது. அடக்குமுறையாலும்,திடீரென வந்து தாக்கும் உத்திகளாலும்,பணம் களியாட்ட மோகங்களை அவர்களின் சமூகத்தில் நுழைத்தும் அந்த ஆதிக்குடிகள் அழிக்கப்பட்ட விதங்களை அவர்களின் எழுத்துக்களில் கண்ணீர் வாக்குமூலமாக தெரியப் படுத்தியிருப்பது மிகச்சிறப்பு.

ஆழியாளின் மொழியாளுமையால் அவர்களின் உள்ளக்குமுறல்கள் எந்த விதத்திலும் சேதமடையாமல் எமக்கு வந்தமை பாராட்டுக்குரியது. மொழிபெயர்ப்புக் கவிதைகள் தான் என்றாலும் அப்படியே மாற்றித் தராமல் மொழி நடையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து எமக்கேற்ற விதத்திலும், அந்த வேதனை கலந்த உணர்வுகள் மாறாமலும் தந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்ற சிறு நப்பாசை எனக்கு ஏற்பட்டது. ஆனாலும், அவர்களின் உணர்வுகளை அப்படியே தருவதற்கு ஆழியாள் மிகவும் முயன்றிருப்பது நன்றாகவே தெரிந்தது.

ஆங்கிலக் கவிதைகளாக இருப்பினும் அதில் உள்ள உணர்வுகள் எம்மையும் எம்மினத்தின் போராட்டத்தையும் நினைவுறுத்திச் செல்வதை மறுக்க முடியாது.

குழந்தைகளின் மனநிலை, மனப் போராட்டம், இழப்புகள், பிரிவுகள், இடமாற்றங்கள் என சமகாலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய கவிதைகள் அந்தக் காலங்களில் எழுதப்பட்டிருப்பதை நோக்கும் போது ஆச்சரியமாக இருந்தது.

இன அழிப்பு என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் எங்கோ ஓரிடத்தில் நிகழ்ந்து கொண்டு தான் இருந்தன என்பதை இக்கவிதைகள் மூலம் அறிய முடிந்தது.

இந்நூலை நாம் படிக்கையில் ஈழப் போரும், சிரியப் போரும் ,யூதப் போரும் இன்னும் எத்தனை எத்தனையோ இனப் போர்கள் நம் கண் முன் நிழலாடுவதை உணர முடியும். பிற மொழிக் கவிதைகளையும் வாசிப்பதால் நம் எண்ணங்கள் கற்பனைகள் இனம், மொழி கடந்த பரந்த சிந்தனையை தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அவ்வாறான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய ஆழியாளுக்கு நன்றியும் பாராட்டுக்களும் கூறி அவரின் இம் மொழிபெயர்ப்புப் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்.


(“பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” – அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள், தமிழில் ஆழியாள் வெளியீடு – அணங்கு (பெண்ணியப் பதிப்பகம்) 3, முருகன் கோயில் தெரு, கணுவாப்பேட்டை, வில்லியனூர், புதுச்சேரி 605110).



Image

முகப்பு | கவிதைகள் | எழுத்தைப்பற்றி | பதிவுகள் | நிகழ்வுகள் | ஏனையவை | சிறுகதை | தொடர்பு

2021 - 2028 Aazhiyaal. All Rights Reserved. | Design: MRT Inc.