லண்டனில் இரண்டு ரயில்
நிலையங்களை இணைத்துச்
செல்லும் பிரதான வீதியொன்றின் இரு கரைகளிலும் பெரியதும்
சிறியதுமான பல வியாபார நிலையங்கள்
எனது வதிவிடத்திற்கு அண்மையில்
அமைந்துள்ளன. வார இறுதி நாட்களில்,
அவற்றின் நடைபாதைகள் மக்கள் நெரிசலினாலும் விரைவுகளாலும் நிறைந்து
கலகலவென்று காணப்படும். மலிவு விலை
‘சென்ற்’ வியாபாரிகள், ‘பத்துக்கு இருபது’
எனக் கூவும் திருட்டுச் சூதாட்டம், ‘ஹரே
ராமா ஹரே கிருஷ்னா’ குழுவினர் ஆவேசமாகக் குரலெழுப்பும் மதப் பிரச்சாரகர்,
வர்ணக்கட்டிகளினால் தெருவில் வரையும்
ஓவியர் ஆகியோர் இந்த வார இறுதி
நாட்களின் சிறப்பு வருகையாளர்கள்.
இந்த வார இறுதிக் கலகலப்புக்களின்
மத்தியில், எப்போதாவது அமெரிக்கப்
பழங்குடியினர் சிலர் தமது பாரம்பரிய
உடையில் தமது இசைக் கருவிகளை
இசைத்து அதன் லயத்திற்கு ஏற்ப தமது
பூர்வீக நடனத்தை ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். இந்தப் பூர்வக் குடிகளின்
இசையையும் ஆடலையும் உடனே கடந்து
போய்விட எப்போதும் முடிந்ததில்லை.
அவர்கள் இசையிலிருந்து இடைக்கிடை
உயர்ந்து எழும் புல்லாங்குழல் போன்ற
ஓசையின் அதிர்வு மனதை அலைக்களிப்பவை. படுகொலைகளால் சிதைந்து போன
இனக்குழுக்களின் அவலம் அதில் இழைந்து
இருப்பதாகவே உணர்வேன். அன்பைப்
போதிக்கவந்த மதங்களுடன் இணைந்து
வந்த வன்மனங்களின் ஆக்கிரமிப்பின்
வேட்கையால் நிலமும் வாழ்வும் இழந்து,
பண்பாட்டு சிதைவுகளுடன் ஐரோப்பிய
நகரங்கள் எங்கும் திசையற்று அலைந்து
திரியும் பல்லின வியாகுலத்தின் குறியீடாக அந்த இசையை நான் உணர்வதுண்டு.
பூர்வீக மக்களை நாகரீகமற்றவர்களாகவும்
கல்வி அறிவற்ற காட்டுமிராண்டிகளாகவும்
உருவகித்த ஆக்கிரமிப்பாளர்கள், அந்தப்
பூர்வீக மக்களை நாகரீகப்படுத்த அவதரித்த தேவர்களாகக் தம்மைக் கற்பித்துக்
கொண்டு ஆடிய வெறியாட்டங்கள் வரலாற்றில் கறுப்புப்பக்கங்களால் நிறைந்திருக்ன்றன. பூர்வீகர்களின் வாழ்புலத்தை,
வாழ்வை, மொழியை, மதத்தை சிதைத்து
அழித்துவிட்டு, அவர்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் அளித்தது அவர்களின் மதத்தைத்தானே! ‘காலணித்துவக்காரர் ஆபிரிக்காவுக்கு வந்தபோது அவர்கள் பைபிளை
வைத்திருந்தார்கள் நாங்கள் நிலத்தை
வைத்திருந்தோம். ‘நாங்கள் பிராத்திப்போமாக’ என்றனர். எமது கண்களை மூடினோம். கண்ணைத் திறந்த பொழுது
பைபிளை நாங்களும் நிலத்தை அவர்களும் வைத்திருந்தார்கள்’. என்ற டெஸ்மன்ட்
ருரூ வின் காலடிக்கு ஆயிரம் முத்தங்கள்.
அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதை
களின் தொகுப்பே ‘பூவுலகைக் கற்றலும்
கேட்டலும்’. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட
இக்கவிதைகளை கவிஞர் ஆளியாள் சிறப்பாகத் தமிழாக்கம் செய்துள்ளார். நூலின்
அறிமுகத்தில் அவர் “புதிய ஆங்கிலக்
குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது
இச்சூழலைச் சாராத, இந்நிலத்திற்கு ஒவ்வாத எத்தனையே பறவைகளும், மிருகங்களும், தாவரங்களும், ஊர்வனவும் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டன.
அவை இப்பூர்வீக நிலத்தின் சுற்றுச்சூழற் சமநிலையைப் பெரிதும் குலைத்தன. ஆங்கிலக் குடியேற்றவாதிகளோடு வந்திறங்கிய இந்நிலத்திற்குப் புதிதான நோய்களும் வியாதிகளும் இப்பூர்வீக மக்களைக்
கொன்றொழித்தன. அபோரிஜினல் பெண்களும் ஆண்களும் அடிமைபோல் நடத்தப்பட்டனர். அபோரிஜினல் குழந்தைகளும் சிறார்களும் இனக்குழுக்களிலிருந்து,
குடும்பங்களில் இருந்து முற்றாகப் பிரிக்கப்பட்டு அரச கண்காணிப்பின் கீழ் பராமரிப்பு இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, ஆங்கில வாழ்க்கை முறைக்குப்
பயிற்றுவிக்கப்பட்டார்கள். இதனால் இத் தலைமுறையைச் சேர்ந்த அபோரிஜினல்
மக்கள் தத்தமது பூர்வீக இனக்குழுக்களின்
உறவுத் தொடர்பு மற்றும் கலாச்சார
பண்பாட்டுத் தொடர்ச்சியை முழுவதுமாக
இழந்தனர்.” என்று குறிப்பிடுகிறார். கலப்பினத்தைச் சேர்ந்த, குறிப்பாக வெண்மைத் தோல் அமைந்த சிறுவர், சிறுமியர்களே இவ்வாறு பலவந்தமாகப் பிரிக்கப்
பட்டனர். ஆங்கிலக் கல்விமுறை என்ற
அனுகூலத்துடன் புதிய பண்பாட்டு மனவயலில் நடப்பட்ட இந்தத் துர்ப்பாக்கி
யத் தலைமுறை வரலாற்றில் Stolen children அல்லது Stolen generation என
அழைக்கப்படுகின்றனர்.
அதிகாரமும் அது இன்மையாலும் முரண்கொண்ட இனக் குழுக்களிடையேதான்
‘அவர்கள்’ ‘நாங்கள்’ என்ற பிளவுகொண்ட
சொற்கள் உருவாகின்றன. தங்கள் நிலத்தையும் வாழ்வையும் தொலைத்த இந்த
ஆதிக்குடிகளின் வழித்தோன்றல்கள் தங்கள் கவிதைகள் மூலம் எதை வெளிப்படுத்துகின்றனர்?
‘நெடிதுயர்ந்த நெடும்சாலை மலைக்குன்றருகே போராளி ஒருவன் மடிந்து கிடக்கிறான்.
அவன் துணையை
ஏறி வன்புணர்ந்து தள்ளிய இராணுவச்
சிப்பாயிடம் உயிருக்கு மண்றாடியவளின்
கறுத்தக் குரல்வளையை தறித்து எடுத்தான். அவள் பாலூட்டிய பிஞ்சு மகவோ
உருக்கு இரும்பால் தலை பிளக்கப்பட்டு
சிதறிய மூளை மெல்லத் துடித்தபடி புற்களிடையே கிடக்கிறது. அவுஸ்திரேலியா
வுக்காக நடந்த கடும் போர்களின்போதெல்லாம் பங்குகொண்ட போராடிய பூர்வகுடி மக்கள் சிலருக்கு வாக்குரிமைகூட
வழங்ககப்படவில்லை. ரூபி லாங்போர்ட்
கூறுவதுபோல் ‘இன்று வாழ்வென்னும் பேரிடரில் உயிர்பிச்சை கிட்டி பல் கலாச்சார
அவுஸ்திரேலியாவில் வாழும் ஒவ்வொரு
கறுப்புப்பெண்ணும் நானே நானே நானே
என்பதுபோல்’ கறுப்பு உணர்வால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.
களவாடப்பட்ட குழந்தைகள் அல்லது களவாடப்பட்ட தலைமுறையின் குரல்களில்:
தனது குழந்தைகளை இழந்த அம்மம்மாவின் துயரைக் குறிப்பிடுகிறாள் ஒருத்தி
‘அவள் குழந்தைகளை
அவர்கள் எடுத்துச்சென்றபோது
தன் மகனையும் ஃ கடைசி
மகளையும்
ஒன்றாய் இழந்தாள்.’
...கார்காலத்து வானிலை போல் ஃகறுத்த நிற
மாயிருக்கும் அவளின் கண்கள் தினமும் ஈரமாய்ப் பனித்து ஒழுகும்’....‘இரு
குழந்தைகளின் உறவுத் தொடர்பும் என்றென்றைக்குமாய் அறுந்த பின்னும் அம்மம்மா அழுது கொஞ்சம் தீர்ப்பாள்.’இன்னொரு குரல் ‘பொன்னிற முடியுடனும் நீலவிழிகளுடனும் கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடைநடுவில் நிற்கிறேன்’ என்று தன்
புற நிறத்தைக் கூறினாலும் கறுப்பரும்
வெள்ளையர்களும் அவ்வுயிரை அருவருப்பாகப்பார்த்தாலும் ‘என்னுடைய ஆன்மா
கறுப்பாலானது என உணர்வுடன் உரக்கக் கூறுகிறார். ஜாக் டேவிஸ்சும் ‘என்னைப்
பற்றி நகரமாக நாறியபடி கிடக்கும் இவ்வழுக்குப் படிந்த வெள்ளையை கழுவி
விடுங்கள்’ என்கிறார்.
இவர்களைக் களவாடிய வெள்ளை மனம்
தம் வன்செயல்களை எவ்வாறு கருதுகிறன?
‘வெள்ளைத்தலைமயிர், வெள்ளைத்தோல்
கொண்ட குட்டிப்பெண்ணே’ என அழைத்து
அவளுக்குக்கான அனுகூலங்கள் பட்டியலிடப்படுகிறது. ‘அதிவிஷேட கவனிப்புக்
களுக்காய் ஒரு குட்டி இளவரசி பிரிக்கப்படுகிறாளாம். அவளுக்கு எழுதப்படிக்
கவும் கொடிக்கு மரியாதை செலுத்தவும்
மேன்மை தங்கிய மகாராணியைக் கனம்
பண்ணவும் கற்றுக் கொடுப்பார்களாம்.
கறுப்புக் காட்டுமிராண்டி இனத்தை வென்றுவாகை சூடிய சமாதானம் பற்றி புதிய
வரலாறு படிப்பாளாம். இதற்காக அந்தக்
கொடுத்து வைத்த குட்டிப் பெண் நன்றியோடு பிராத்தனை செய்யவேண்டுமாம்.
இதைத்தானே எல்லா ஆக்கிரமிப்பாளர்களும் இன்றுவரையும் அலுக்காமல் சலிக்காமல் பூச்சுற்றுகிறார்கள். பலாத்காரத்தினால் திணிக்கப்பட்ட வெளி அடையா
ளங்களுக்குள்ளும் எல்லா அடக்குமுறைக்கும் தங்கள் உயிர்ச் சக்தியான கறுத்த
ஆன்மாவைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்கள். இதை 1958ல் சின்னுவா அச்சிபே Things Fall Apart நாவல் வெளிப்படுத்தவில்லையா? அதன் தொடர்ச்சியினை
2003ல் வெளிவந்த சிம்மாமாண்டா என்கோசி அடிச்சியின் Purple Hibiscus நாவலில் கிறிஸ்தவ கடும்போக்காளர் ‘பப்பா’
யூஜினின் தந்தை தனது கறுத்த ஆன்மாவைக்காத்துக்கொள்ளும் தொடர்ச்சி வெளிப்படவில்லையா?
அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளினால்
வாழ்க்கை சிதைக்கப்பட்டாலும் அவர்கள்
மனம் அவர்களின் பூர்வீகக்குடிகள் போன்று
இயற்கையின் அழகுணர்வுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. ‘ஆற்றங்கரையிலே பிறந்து அல்லி இலையிலே
தலைசாய்க்கும்’ மனம் அவர்களுடையது.
அது ‘மலையடிவாரத்தை நோக்கி வழியும் நீர்pன் சலசலப்போடு’ கூட உலவுகிறது. ‘ஆழ்ந்து தூங்கும்போது அவர்களுக்கான பூவுலகு அவர்கள் ஆன்மாவுக்குள்
உயிர்கொள்கிறது’. ‘சுவாசிக்கும் போது
உணர முடிந்தவர்களால் கனவில் அதனோடு உரையாடவும் முடிகிறது’. ‘இறக்கைகளால் வான்வெளியை அணைக்கவும்’
‘இரவின் போர்வைக்குள் தாவிச் செல்லவும்’ ‘மேகங்களைக்கொய்து ஆடை செய்யவும்’ முடிந்த அவர்களால் ‘கருமேகங்கள்
மேல்வானத்தில் திரண்டு மழைபொழியத்
தயாராகும்போது குலவழக்கப்படி கோடாரியை வீசிக் காட்டி, மழைமேகங்களை
ஒரே வெட்டாக வெட்டிப் பிளந்து கூச்சலி
டும் தாயையும் ‘சிவந்த மலர்கள் மலரும்
வாசனையை முகர்ந்த வண்ணம் கிளையொன்றில் கூடி அமர்ந்திருக்கின்ற பறவைகளை’யும் துள்ளித் திரிந்த களைப்பில்
நிழலில் கால் நீட்டிச் கிடக்கும் கங்காருவை’யும் ‘மிக்’ மாமாவுடன் சென்ற
முதலை வேட்டையையும் அவர்கள் தங்கள் மனங்களில் உயிர்ப்புடன் காத்துவைத்துள்ளனர்.
அவுஸ்திரேலிய பூர்வ இனக் குடிகளின்
வாழ்வில் கறுப்பும் பூர்வீகத் தடங்களும்
வகிக்கும் முக்கிய பாத்திரத்திற்கு நிகரான
முக்கியத்துவத்தைத் ‘தைல மரங்கள்’
கொண்டுள்ளன. அவை, அவர்கள் வாழ்வின்
குறியீடாகவும் அந்த மண்ணின் தொன்மையாகவும் அந்த மண் வழங்கும் உயி
ரியல் வளர்ச்சியாகவும் கவிதைகளில்
வெளிப்படுகின்றன. ‘இம்மண்ணிலேயே
உரமேறி முதிர்ந்த தைலமரத்தைப்போல்
இந்நிலத்தின் பகுதி நானே’ எனவும்
பெரிதும் உயரமானதுமான தைலமரங்களே
நீங்களோ மண்ணில் உரித்தாயிருக்கிறீர்
கள். எனக்கூறும் கவிதை இறுதியில் ‘தைல
மரங்களே என் மூளையினூடே ஊடுருவி
வெளியேறுங்கள் மறுவழியால் எங்கு
உரித்தாய் வாழ்ந்திருந்தோமோ அங்கு
கொண்டு சேர்த்துவிடுங்கள் எம் எல்லோரையும்’ என்று முடிக்கிறது. இந்த மரத்தை
அதிகாரம் அழிக்க நினைப்பதையும் பூர்வீக இனம் அதை மறுப்பதையும் ‘வெட்டி
வீழ்த்துதல்’ என்ற கவிதை வெளிப்படுத்துகிறது. நெடுந்தைலக் காட்டிற்குப் போய்
மரத்தை வெட்டிக் கீழே வீழ்த்தும்படி
பணிக்கப்பட்டது. ... ‘நீ வீழ்ந்து கிடப்பதை
அந்த மனிதன் வேண்டுகிறான் ஆனால்
நானோ நீ உயிரோடு இருப்பதையே
விரும்புகிறேன்’ என்ற அவனுடன் அந்த
தைலமரம் கனிவுடன் உரையாடுகிறது.
இறுதியில் ‘நான் அந்தக் கோடாரியைக்
குழிதோண்டிப் புதைத்துவிட்டேன் அந்த
வெளிச்சமான வெய்யில் நாளில்’ என்று
முடிகிறது.
இத் தொகுப்பிலுள்ள ‘கருப்புப் பெண்’,
‘ஆதிக் குடிகளின் ஆன்மா’ ஆகிய கவிதைகள் அவுஸ்திரேலிய ஆதித் குடிகளின்
பெண்மையின், இயற்கையின் பொதுக்
குரலாகவே உணர்கிறேன். ‘காதலிக்கப்படுகின்ற ஒவ்வொரு கறுப்புப் பெண்ணும்
நானே நச்சத்திர இரவில் கிட்டாரின் இசை
மழையில் கிறங்கிக் கிடக்கின்ற ஒவ்வொரு
கறுப்பியும் நானே’ எனத் தொடரும் கவிதை
கருப்பின பெண்கள் அனுவவித்த வாழ்வின் துயரங்கள் அனைத்திலும் தன்னையே
காண்பதைப்போல் ஆதிக்குடிகளின் ஆன்மா கவிதை புவியியல் கூறுகள் அனைத்தி
லும் தன்னை அடையாளப்படுத்துகின்றன.
இத்தொகுப்பிலுள்ள “கவிதைகள் எழு
தப்பட்டிருக்கும் வரிவடிவம் ஆங்கிலமாக
இருந்தாலும் அவற்றின் ஆன்மா கண்ணைப் பறிக்கும் பிரகாசத்துடன் கறுப்காக இருக்கிறது”. என்ற ஆழியாளின்
கூற்றுடன் எந்தத் தயக்கமும் இல்லாமல்
இசைந்து கொள்ளலாம்.
இறுதியாக கனடாவின் பூர்வ குடியின்
கவிஞர் ‘கொமோகா’ தனது The Heart
Beat கவிதையில் ‘நீங்கள் பறை இசைத்துப் பாடுகையில் எமது முதல் குடிகளின் இதயத் துடிப்பை இன்னும் அதிக
மாகப் புரிந்தகொள்ள முயல்கிறேன்’ என்று
கூறியதைப்போல் இத்தொகுதின் கவிதைகள் மூலம் ஆதிக் குடிகளின் ஆன்ம
துடிப்புக்களைப் இன்னும் அதிகமாகப்
நாம் புரிந்து
கொள்ளலாம்.
நன்றி: தாய்வீடு • ஏப்பிரல் 2019
(“பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” – அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள், தமிழில் ஆழியாள் வெளியீடு – அணங்கு (பெண்ணியப் பதிப்பகம்) 3, முருகன் கோயில் தெரு, கணுவாப்பேட்டை, வில்லியனூர், புதுச்சேரி 605110).