Logo

ஆழியாள்

aazhiyaal.net



  • முகப்பு
  • கவிதை
  • எழுத்தைப்பற்றி
  • பதிவு
  • நிகழ்வு
  • ஏனையவை
  • சிறுகதை
  • தொடர்பு

பயணம்


நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்
கூடவே பலரும்.

இடையிடையே புன்னகைகள்
குசல விசாரிப்புகள்.

சிலர் மென்றபடி
சிலர் வாய் பிளந்து தூங்கியபடி
சிலர் வானவெளியில் வளையக்கலங்களைப் புகைத்தனுப்பி
எதை எந்த மண்டலத்தில் இறக்கலாம் என்ற
எண்ணத்தில் மிதந்தபடி,
எதிர்ப்பட்ட மூடிய சேலை முலைகளை
சுவைத்தபடி வேறு சிலர்,
இன்னும் சிலர் பேசத் தொடங்கியிருந்தனர்.

என்னிடமும் சில கேள்விகள்
விண்வெளிக் கற்களைப் போல்
சுழன்று பறந்து விர்ரெனக் குத்திட்டு
நேராய் வந்து விழுந்தபடி கிடந்தன.

நாங்கள் கதைக்கத் தொடங்கினோம்
தாய்மொழி, தேசியமொழி,
உலகமொழி, பழையமொழி
முதல்மொழி, மூன்றாம்மொழி, சைகைமொழி என
பலமொழிகளிலும் கதைத்தோம்.

நான் சொல்வது பொய்யென்று
அவர்கள் அறிந்தார்கள்
அவர்கள் பேச்சு புழுகென்று
நானும் அறிந்தேன்
ஆளை ஆள் அறிந்து கொண்டபோது,
என்கதையெல்லாம் வெற்றுக்குமிழிகள் என
எனக்குள் அறிகிறேன்
அவர்கள் வாக்கு பொய்யென்று
தமக்குள் அறிவார்களா?

எதுவாய் இருந்தால் என்ன?
நாங்கள் தொடர்ந்து கதைத்தோம்
பறைந்தோம், செப்பினோம்,
உரையாடினோம், திருவாய்மொழிந்தோம், பேசினோம் ........

குமிறும் ஒரு பத்தாயிரத்து எண்பத்து எட்டுக்கோடி அலைகள்
மலையாய் சீறிக் கொந்தளித்து எழுந்து
துளாவி எமை இழுத்துச் சுருட்டி - எங்கோ
அளவறியா ஒற்றைப் பொந்தின் ஆழத்தில்
திணித்துச் செருகி
சுடு மண்படைகளால் அடுக்கி மூடி - மேலே
குறுங்கற்களால் செப்பனிட்டு மேவிக் களையாறி
முறுவலிக்கும் ஆழ்கடலின் மௌனத்தினூடு
உண்மை நீலமாய்க் கசியும் வரை
பேசினோம் பேசினோம்
நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்;.

உயிர்க்காற்றின் வீரிட்ட அலறல்
உடற்குகையின் இருள்வெளியில் அலமலந்து அலமலந்து மோதி
எதிரொலித்தது.


12.07.1999


Image

முகப்பு | கவிதைகள் | எழுத்தைப்பற்றி | பதிவுகள் | நிகழ்வுகள் | ஏனையவை | சிறுகதை | தொடர்பு

2021 - 2028 Aazhiyaal. All Rights Reserved. | Design: MRT Inc.