Logo

ஆழியாள்

aazhiyaal.net



  • முகப்பு
  • கவிதை
  • எழுத்தைப்பற்றி
  • பதிவு
  • நிகழ்வு
  • ஏனையவை
  • சிறுகதை
  • தொடர்பு

நிலுவை


நீ திருப்பித் தரலாம்
மணிக் கூட்டை
கை விளக்கை, கத்தரிக்கோலை
(கன்னிமீசை வெட்ட நீயாய்க்
கேட்டது நினைவு)
கடும்பச்சை வெளிர் நீலக்
கோடன் சேட்டுக்களை
தரலாம் - இன்னமும் மிச்சங்களை
இன்று பல்லி எச்சமாய்ப் போனவற்றை.

உன் முகட்டில் சுவடாய்ப்
பதித்த
என் காட்டுரோஜா உணர்வுகளையும்,
அள்ளியள்ளித் தெளித்து
பூப் பூவாய்ப் பரவிய
திவலைக் குளிர்ச்சியையும்
எப்படி மறுதலிப்பாய்?
எந்த உருவில் திருப்பி அனுப்புவாய்?

கடிதத்திலா
காகிதப் பொட்டலத்திலா?
இதில் நான்
உனக் கிட்ட உதட்டு முத்தங்களையோ
நீ எனக்குள் செலுத்திய
ஆயிரத் தெட்டுக் கோடி விந்தணுக்களையோ
நான் கணக்கில் எடுத்து
சேர்க்கவில்லை என்பது மட்டும்
நமக்குள்
ஒரு புறமாகவே இருக்கட்டும்.


20.10.1995


Image

2021 - 2028 Aazhiyaal. All Rights Reserved. | Design: MRT Inc.
















Flag Counter