இனவாதி
எட்டியெட்டி மெல்ல எட்டி
ஊர்ந்தபடி
தன் எல்லைகளை நீட்டி அணைத்த கடமை
அப்போதைக்குத் தீர்ந்ததென்று
சுழற்புயல் கிளப்பி எறிந்த
அவ் வோரக் கிராமம் போல்
நுரைத்துக் களைத்திருந்தது கடல்.
குடியேற்றத் தடயங்கள்,
சிலாகைக் கட்டைகளாகவும்
நைந்து நிறம் பழுத்துத் தொங்கும்
கிழிசல் சீலைகளாகவும்
தலை சிதறிய
மட்பாண்ட மிதவைச் சில்லுகளாகவும்
அடையாளங் கொண்டன.
பாளைத் தென்னைகள்
கடல்பூத்த பூக்களைப் போல்
அடிப்பாகம் அமிழ்ந்து போக
தலைமட்டும் தூக்கி நிமிர்ந்தபடிக்கு.
வீதிகளிற் பல
வழிகாட்டிப் பலகைளுடன்
காணமலே போயிருந்தன - கூடவே
கரை விழுங்கித் தொலைந்திருந்தனர்
மிக அதிகம் பேர்
சுவடழிந்து.
அன்றைய மங்கல் நிலவொளியில்
கடற்படுக்கைத் தளத்தினின்றும்
தெத்துப்பல் முறுவல் ஒன்று
கட்டவிழும் பன்னற் பாயாய்
வரக்கண்டேன் விரிந்து.
28.06.2002