Logo

ஆழியாள்

aazhiyaal.net



  • முகப்பு
  • கவிதை
  • எழுத்தைப்பற்றி
  • பதிவு
  • நிகழ்வு
  • ஏனையவை
  • சிறுகதை
  • தொடர்பு

மரணம்


கலங்கரை விளக்கத்து
இரவுக் காவலாளியாகவும்
கலங்கரை விளக்கத்து
கலங்கரை விளக்கத்து
ஆறடிக் குழியுள்
மௌனம் புடைசூழ இறக்கப்பட்ட
பிணமொன்றைப் போலவும்
தனித்தே
மிகத் தனித்தே இருக்கிறேன்.

வாசல் மணி ஒலிக்கவில்லை
ஆனால்
கடைசிச் சகோதரியின் உரிமையுடன்
என் கைபற்றி
ஊசிக்குளிர் கவ்வாதிருக்க
பஞ்சுச் சப்பாத்துகளும், இறகுச்சால்வையும் தந்து
அழைத்துச் செல்ல
வந்திருக்கிறாள் அவள்.

தோட்டத்து
மேப்பிள் கூடுகளுள்ளே
கீச்சிடும்
அடைபொரிந்த குஞ்சுகளைக் கேட்டவாறு
நாங்கள்
வாசற்படி தாண்டினோம் கைகோர்த்த சிறுமிகளாய்.

வியாபாரக் கூவல்கள், வாகன இரைச்சல்களிலிருந்து,
அணுவுலைக் கழிவுகளிலிருந்து,
மேலும் போர்களிலிருந்து நீங்கிப் போனோம் மெதுவே.

தொடர்ந்து வந்த
ஊகங்களற்ற வழிப்பாதையில்
ஆள்புகா வனங்களும், சமுத்திரங்களும்
வரைபடத்துக் எல்லைகளால் குறுக்கவெண்ணா
நெடுஞ்சாலைகளாய் நீண்டு விரிய,
பக்கக் காட்சிகளாய்
கிளைதாவும் கருமந்திகளையும்
உவந்தாடும் கடற்பாசிகளையும் கண்டேன் நான்.
அருகில்
வாஞ்சைமிகு நடுவயது நட்பாய்
கூடவே
வந்தாள் அவள்.

எதிர்ப்பட்ட யுக சந்திகளில்
மெல்லெனத்
துமித்துப் பெலத்தது
கடிகாரத்துக் கம்பிகள் மூன்றொடு
காலங்கள் ஆறும்
காற்றின் சுழலில்
திசைகள் கூத்திட
தீத்திரள் மலைகளை உமிழும் கண்டங்கள்
எழுந்தன
கற்குகை ஓவியமாய்.

அப்போதும் கூட
பிரியத்துக்குரிய ஆசிரியராய் பேசி விவாதித்தபடி
புத்தகத்தோடும், புன்முறுவலோடும்
என் கூடவே
அமர்ந்திருந்தார் அவர்.


23.09.2003


Image

முகப்பு | கவிதைகள் | எழுத்தைப்பற்றி | பதிவுகள் | நிகழ்வுகள் | ஏனையவை | சிறுகதை | தொடர்பு

2021 - 2028 Aazhiyaal. All Rights Reserved. | Design: MRT Inc.