கி.பி 2003 இல் தைகிரீஸ்…
என் மடியில்
வாட்டிய பாண்; துண்டுகளுடன்
அமர்ந்திருந்தது ஒரு கோப்பை.
ஆசுவாசமாய் அருகே
தன் ஆவியைப் பறக்க விட்டபடி
சிறு கோப்பிக்கிண்ணம்.
விடிகாலைச் செய்திகள்
தொலை நிழலாய்
சுருள் அவிழ
தூரத்துப் பார்வையில்
தைகிரீஸ் நதிக்கரையைப்
பார்த்திருந்தேன்.
இருண்முகிலாய்ப் பிரண்டெழும்
புகைமூட்டத்துள்
உலகத்துக் கடவுளரெலாம்(?)
ஒற்றுமையாய் வந்தாற்போல
சோதிப் பெரும் பிரகாசத்தில்
ஊனக்கண் கெடப் பார்த்திருந்தேன்.
அசரீரிகளின் ஒலித்தெறிப்பில்
செவிப்பறைகள் அதிர்ந்து நோக
மேலும் பார்த்துக் காத்திருந்தேன்.
கிட்டவே இப்போது மிகக் கிட்டவே
தெரிகிறது தைகிரீஸ் நதிக்கரை.
அங்கு காலகாலமாய்க்,
காலம் தன்னில் கதைகளை கிறுக்கிச்
சென்ற கைகளை
உயர்த்தி மேலே பிடித்திருந்தது
மெசப்பத்தேமியா
அதில்
பதாகையேதும் தெரியவுமில்லை,
இருக்கவுமில்லை.
சுருங்கிய வெறுங்கைகளே
வெம்பி அல்லாடிச் சொல்லப்
போதுமானதாய் இருந்தன
வேண்டாம் போர் என்று.
கண்கள்
கரும்பிணம் மிதக்கும்
சிறு குட்டைகளாய்
கலங்கிக் குழம்பித்
தெளிவுற முயல
காலியாய்க் கிடந்தன
கோப்பையும்
கிண்ணமும்.
27.03.2003