Logo

ஆழியாள்

aazhiyaal.net



  • முகப்பு
  • கவிதை
  • எழுத்தைப்பற்றி
  • பதிவு
  • நிகழ்வு
  • ஏனையவை
  • சிறுகதை
  • தொடர்பு

பெருமடி


கடற்கரைகளில்
எவ்வாறெல்லாம் புதைத்திருக்கிறோம்
இரகசியங்களை.

விரல்களால் கீறி அழித்தவையும்
காற்பெரு நகத்தால் நிமிண்டிப் புதைத்தவையும்
கால் நனைக்கையில் பாதத்தூடு நழுவிப் போனவையும்
மணற்கோட்டையாய் எழுந்தவையும்
தோண்டிய குழியுள் விழுந்தவையும் என
எத்தனை இரகசியங்களைப்
புதைத்திருக்கிறோம் கடற்கரைகளில்!
எத்தனையைக் கரைத்திருக்கிறோம் இக் கடல்நுரைகளில்.

ஆனால்
கடலின் பெருமடியோ வாஞ்சை மிக்கது,
மிக வாஞ்சை மிக்கது.

இரைச்சலில்
நம் காதுகளுக்கெட்டாத வாக்கியங்களின் கருணையையும்,
கரிக்கும் உப்புக்காற்றில்
காதலர் மென்று விழுங்கிய அழகிய சொற்களையும்,
பிரம்ம ரகசியமாய்க் கோர்த்து வைத்திருக்கிறது அப் பெருமடி.

ஒவ்வோர் நாளினது கடைநுனியிலும்
நம் ஒவ்வோரது ஒவ்வொரு ரகசியமும்
உயிர் பெற்று எழுகிறது
சினை பொதிந்த ஓர் வெள்ளி மீனாய்
ஓர் கடற்பாசித் தாவரமாய்
ஓர் பவளப் பூப்பாறையாய் உருக்கொண்டு.

ஆமாம்
கடலின் பெருமடியோ வாஞ்சை மிக்கது,
மிக வாஞ்சை மிக்கது.

மீளவும் மற்றுமொரு புதிய நாளின் விடியலில்
ஹோ... ஹோ... ஹோவென
மேலும் இரகசியங்கள் பல வேண்டி
ஆர்ப்பரித்துப் பாறைகளில் மோதிச் சிதறுகிறது கடல்.
கரையொதுங்கும் அலைகளுடு
தவிப்பாய்க் காத்திருக்கின்றனர் கடற் கன்னியர்
நம் இரகசியங்களைக் கடல் சேர்த்து உயிர்ப்பிக்க.


17.01.2007


Image

முகப்பு | கவிதைகள் | எழுத்தைப்பற்றி | பதிவுகள் | நிகழ்வுகள் | ஏனையவை | சிறுகதை | தொடர்பு

2021 - 2028 Aazhiyaal. All Rights Reserved. | Design: MRT Inc.