அம்மா
அம்மா
தினமும்
புல்வெளியைக் கடந்து,
தார் வீதியைக் கடந்து,
மைதானத்தைக் கடந்து,
ஓடுகின்றாள்.
பள்ளிக்கூடத்தில்
தெருவில்,
விளையாட்டுத் திடலில்,
வயல்களில்,
தொடர்மாடி வேலைத்தளத்தில்,
வீட்டில் என
எங்கும்
அம்மா சில்லுக்கட்டினாற் போல் ஓடினபடியே இருக்கிறாள்.
நம் ஓய்வுநேரங்களிலும்,
விடுமுறை நாட்களிலும், பண்டிகைக் காலங்களிலும் கூட
அம்மா அவதியாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறாள்.
இலைகளைக் காணாது பாதையோரத்து மரங்கள்
வெலவெலத்து நிற்கின்ற நாட்களில்,
சருகுகளைச் சலசலக்க வைத்தபடி
அம்மா ஓடுகிறாள்.
காதோரச் சவ்வுகளில் வலிசுண்ட
கிளைகளாய் உறைந்து தொங்குகிற
கொடும் பனியின் வெண்மையூடு,
ஒரு சறுக்கு வித்தைக்காரியைப் போல்
அம்மா குளிரில் ஓடுகிறாள்.
அம்மா
எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறாள்.
நேரம், நேரம் என்று ஆலாய்ப் பறக்கிறாள்.
அமைதியின் நிழற் பொழுதுகளில்
ஏகோன் காய்கள் பொத் பொத்தெனெ உதிரும் போதும்
பறவைக்கூட்டங்கள் ஜிவ்வென நீருள் இறங்கும் போதும்
அம்மாவின் கால்கள் மாத்திரம் ஓடிக்கொண்டு இருக்கின்றன.
அம்மா ஓடிக்கொண்டே இருக்கிறாள்
வசந்தம் முளைகட்டி மலர்வதைப்போல்
தலைதிருப்பி
என்னையும், உன்னையும் பார்த்தபடி
புன்னகைத்துக் கையசைத்த வண்ணம்
அதோ அம்மா ஓடுகிறாள்.
(March 2011)